தாலாட்டு பாடல் Poem by Saravanan Sivasubramanian

தாலாட்டு பாடல்

தாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்
உறங்காத விழிகள் இரண்டும் கண்ணீர் என்னும் ஆற்றில்

ஓடிவரும் நதியலைகள்
காலத்தின் கண்ணீர் மொழி
போகுமிடமெலாம் கதை கூறுமோ
சோகங்களை கூறி மெல்ல கலைந்தோடுமோ
நீ நடந்த பாதை எல்லாம்
நான் நடந்து பார்த்தேன் மகனே
தேராக நீ அசைந்த பாதையிலே
நினைவுகளின் ஊர்கோலம் கண்ணே

நெஞ்சில் ஆடும் நினைவலையில்
சிறுமலரின் மழலை மொழி
சிலுவையாகி எந்தன் நெஞ்சில் சுமையாகுமோ
சுமைதாங்கி ஒன்றை காலம் தரகூடுமோ
தேன் கொடுத்த பூக்கள் எல்லாம்
சருகாக உதிரும் கோலமே
வேர்பிடித்த மண்ணில்
மழை நீரின் ஈரமே

காணுகின்ற கனவுகளில்
துரத்தி வரும் உன் நினைவு
பூமலருகின்ற வேளை புயல் வீசியதோ
தீ இல்லாமலே அனல் பேசியதோ
வான் பார்த்து போகும் பயணம் உனக்கு
மண் மீது நரகம் எனக்கு
நீ நடை வண்டி பயின்ற காலம் மனதில்
நடைபோடும் நேரம் இன்று
நீராக மாறிய மேகமே
கண்ணீராக மாறிய சோகமே

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success